வெள்ளி, 24 ஜனவரி, 2020

கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து பரவியிருக்கலாம் என தகவல்..!

சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டதட்ட கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸால் உருவாகும் நோய் சீனா மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு மரணம் ஏற்படுகிறது என்பதால் அந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ், விலங்குகளிடமிருந்து உருவாகும் வைரஸ் என்றும் குறிப்பாக அது பாம்புகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸானது, நாகம் மற்றும் சீன கிரெய்ட் வகையை சார்ந்ததாக பாம்புகளிடம் இருந்து பரவியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியகியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு முடிவுகள் வில்லே (Wiley) இணையதள நூலகத்தில் 22ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
Corona
சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த கொரோனா வைரஸால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட 400 பேரில் அமெரிக்காவை சார்ந்த நபரும் ஒருவர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் ஆசிய கண்டத்திற்கு வெளியேயும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிமோனியா நோய்க்கான அறிகுறிகளே கொரோனா வைரஸால் தாக்கப்படுபவர்களுக்கும் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் இந்த நோயை கண்டுப்பிடிப்பதில் குழப்பத்தில் உள்ளனர்.  
corona market
சீனாவின் வுஹான் நகரிலேயே முதன்முதலில் கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்குள்ள கடல் உணவுகளை விற்கும் அங்காடியிலிருந்தே பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு கோழி, பாம்பு, வெளவால்கள் மற்றும் பிற பண்ணை விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனை பட்டியலில் பாம்பும் இருப்பதால், இந்த கண்டுப்பிடிப்பு உண்மையாக இருக்கலாம் ஆராய்ச்சியாளர்களின் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. மேலும் கொரோனா வைரஸானது கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய சார்ஸ் (SARS) வைரஸ் வகையைச் சார்ந்தது என்பதால் சீன மக்கள் மத்தியில் அதிக பீதி கிளம்பியுள்ளது. மேலும் இந்த சார்ஸ் வைரஸால் கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில், புதுக்கோட்டையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது, “சீனாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதால் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்காது” எனவும் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv