ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அதிக மின்சாரம் உற்பத்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் புதிய சாதனை!


Image
கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளின் மூலம் 9,400 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப் பட்டுள்ளது என்று வளாக இயக்குநர் சஞ்சய்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பில் செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் வைத்து 71வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சஞ்சய் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்பு அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள 21 அணு மின் நிலையங்கள் மூலம் 2019 - 2020ம் ஆண்டில் இந்திய அணுமின் கழகம் சார்பில் 38,575 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளின் மூலம் 9,400 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவே அணுமின் உற்பத்தி வரலாற்றில் உச்சபட்ச மின் உற்பத்தி ஆகும் என்றார். இந்தியாவில் 6 அணு உலைகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் இரண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் இரண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ராபூர் அணுமின் நிலையத்திலும் இரண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராவ்த்பாட்டா அணுமின் நிலையத்திலும் கட்டப்பட்டு வருகிறது என்று கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளும் ஹரியானா மாநிலத்தில் கோரக்பூரில் 2 அணு உலைகளும்விரைவில் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது என்றார்.
அதோடு, கூடங்குளத்தில் 6 அணுமின் நிலையங்களும் செயல்படும்போது இந்திய அணுமின் கழகத்தின் அதிக மின் உற்பத்தி செய்யப்படும் இடமாக கூடங்குளம் திகழும். கூடங்குளம் முதல் அணு உலையில் தற்போது 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணிக்காக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நடப்பாண்டில் கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து 81%மும், இரண்டாவது அணு உலைகளிலிருந்து 93% மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது கூடங்குளம் அணுமின் நிலைய வரலாற்றில் உச்சபட்சமாகும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ரஷ்ய, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அணுமின் நிலைய ஊழியர்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
credit ns7.tv