ரஜினியைச் சுற்றி அரசியல் பரபரப்புகளும் சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் நிகழ்ச்சியில் பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற மாநாடு குறித்து ரஜினி பேசிய கருத்துக்களும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகத்தினரும், திராவிட அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கொந்தளித்துள்ளனர். ரஜினிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் திராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர்.
அதே நேரத்தில் பாஜகவினர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது பற்றி கருத்து தெரிவித்தார். பெரியாரின் இந்து விரோத நடவடிக்கைகள் குறித்து இன்னும் விரிவாக ரஜினி பேசியிருக்க வேண்டும் என்று அப்போது ஹெச்.ராஜா தெரிவித்தார்.
பெரியார் நடந்துகொண்டதைத்தான் ரஜினி கூறியுள்ளார் என்றும் உண்மையை கூறிய அவர் மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் ஹெச்.ராஜா கூறினார்.
இதற்கிடையே துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்த விவகாரம் வழக்குப்பதிவு வரை சென்றுவிட்ட நிலையில் ரஜினிதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். எதையும் யோசித்து ரஜினி பேச வேண்டும் என்றும் இரண்டுவிதமான கருத்துக்களைக் கூறக் கூடாது என்றும் கடம்பூர் ராஜூ கூறினார்.
பெரியார் தொடர்பாக தான் பேசிய கருத்துக்களுக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பாரா அல்லது தனது கருத்தில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
credit ns7.tv