வெள்ளி, 31 ஜனவரி, 2020

SARS-ஐ மிஞ்சும் Corona வைரஸ்?: இந்தியாவிற்கும் பரவியது!

Image
டிசம்பர் 31ம் தேதியன்று முதல் முறையாக சீனாவின் Hubei மாகாண தலைநகர் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று கொடிய தொற்றுநோயாக மாறி சீனாவையும் கடந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை குணப்படுத்த வழி தெரியாமல் மருத்துவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
கொரோனாவின் தோற்றம்:

விலங்குகளின் இறைச்சி விற்பனை செய்யப்படும் மார்க்கெட் ஒன்றிலிருந்து இந்த வைரஸ் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

corona
கொரோனா வைரஸ் தாக்குதலின் பிறப்பிடமான வுஹான் உள்ளிட்ட அண்டை நகரங்களை சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தனித்து வைத்துள்ளனர். இந்த நகரங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் பொதுமக்கள் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.

corona-virus
சீனா மட்டுமல்லாது தாய்லாந்த், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர், மகாவ், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிரான்ஸ், வியட்னாம், கனடா, ஜெர்மனி, இலங்கை, கம்போடியா, ஐக்கிய அரபு அமீரகம் என இந்த வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா:
இந்நிலையில் சீனாவில் உள்ள வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20 பேரின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் சீனாவில் இருந்துவந்த அந்த மாணவி திருச்சூர் அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்..
இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று இணைந்தது.
SARS-ஐ மிஞ்சிய Corona: 
இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 7,711 பேர் வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சீன மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2002-03 காலகட்டத்தில் SARS என்ற வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 5,327 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதையும் மிஞ்சும் வகையில் கொரோனா வைரஸின் பாதிப்பு பரவியுள்ளது. எனினும் சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு  774 பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளது. எனினும் சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.
credit ns7.tv