அண்மையில் உலக கவனத்தை பெற்ற விஷயமாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளனர். சுமார் 600 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
லாக்டவுன்:
சீனாவிலிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவுவதாக அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹான் மற்றும் அதன் அருகில் உள்ள Huanggang ஆகிய நகரங்கள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளன.
1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்தில் உள்ள விமான நிலையம், ரயில், பேருந்து போக்குவரத்து ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல 70 லட்சம் மக்கள் தொகையை கொண்டதுமான Huanggang நகரத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சீன புத்தாண்டு:
வரும் சனிக்கிழமை சீனாவில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், மற்ற நகரங்களுக்கு இங்கிருந்து மக்கள் பயணமாவதை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கேஸ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், மால்கள், காஃபேக்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம், கூடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாமெனவும், வெளியில் பயணமானால் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாம்புகள்:
கொரோனா வைரஸ், பாம்புகள் மூலமாக மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv