சட்ட மேலவையை கலைத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 133 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்காக அம்மாநில அரசு இயற்றிய மசோதாவை, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அம்மாநில சட்ட மேலவை அனுப்பியதை அடுத்து, தற்போது சட்ட மேலவை கலைக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சட்ட மேலவைக்காக ஆண்டுதோறும் 60 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவை இயற்றும் மசோதாக்களை தடுக்கும் பணியில் ஈடுபடும் சட்ட மேலவைக்கு செலவு செய்வது வீண் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
credit ns7.tv