ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுகிறது: வைகோ

Image
மக்கள் கருத்துக்களை கேட்க கூடாது என பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முன் எப்போதும் விட தற்போது அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார். இந்தி தான் இந்தியாவின் உச்சம் எனவும் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருவதாக விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை நாட்டு மக்கள் உட்பட நடுநிலையாக இருப்பவர்கள் கூட எதிர்க்க வேண்டிய நிலைமை வந்து உள்ளதாக குறிப்பிட்டார்.  

ஹைட்ரோகார்பன் உட்பட எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் கருத்தை கேட்காமல் பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்வதாக குற்றம் சாட்டினார். பெரியாரின் சிலையை திருட்டுத்தனமாக உடைக்கும் கயவர்களால் அவரது புகழை மறைக்க முடியாது எனவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வைகோ தெரிவித்தார்.

credit ns7.tv