குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த டிசம்பர் 12ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சாசனப்படி இந்த சட்டம் சரியானதே என்பதை அறிவிக்கக் கோரி சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை கடந்த டிசம்பர் 18ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், மனுக்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வர உள்ளன. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மனுக்கள் மீதான விசாரணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
credit ns7.tv