வெள்ளி, 24 ஜனவரி, 2020

தமிழகத்தில் அமலாகிறது மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்...!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் சோதனை அடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக பதவியேற்றதை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களுக்காக முகவரியை மாற்றி கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும், அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  
ரேஷன் கடை
இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், வரும் ஜூன் 30-ம் தேதிக்குள், நாடு முழுவதும் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. 
இந்நிலையில், ஒரே நாடு ஒரே ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 

credit ns7.tv