credit ns7.tv
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சீனாவையும் கடந்து இந்த வைரஸ் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் இந்த கொரோனா வைரஸ் குறித்து என்னவெல்லாம் நிகழ்வுகள் தற்போதைய சூழலில் அரங்கேறியுள்ளன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.
தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது, இதில் 100 பேர் ஹூபே மாகாணத்தில் மட்டுமே பலியாகி உள்ளனர். ஹூபே மாகாண தலைநகரான வுஹானில் தான் இந்த வைரஸ் தோன்றியதாக தெரியவந்தது. இந்த வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் 4,515 பேர்.
சீனா தவிர்த்து இந்த வைரஸ் தாக்குதலுக்கு தாய்லாந்த் மற்றும் ஹாங்காங்கில் தலா 8 பேரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் மகாவில் தலா 5 பேரும், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியாவில் தலா 4 பேரும், பிரான்ஸில் மூவரும், வியட்னாம் மற்றும் கனடாவில் தலா இருவரும், ஜெர்மனி, இலங்கை மற்றும் கம்போடியாவில் தலா ஒருவரும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சீனா தவிர்த்து எந்த நாட்டிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு யாரும் பலியாகவில்லை.
1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரின் விலங்கினங்களின் மாமிசம் விற்பனை செய்யும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வுகான் நகரில் இரண்டு பெரிய மருத்துவமனைகளை அவசர நோக்கில் சீனா கட்டமைத்து வருகிறது.
வுஹான் உட்பட சுமார் 15 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டு, சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவுக்கு மருத்துவ அவசர நிலை என்றாலும் உலகளவில் அவசர நிலையாக இன்னும் மாறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2002-03ல் சுமார் 800 பேரை பலிகொண்ட Severe Acute Respiratory Syndrome (SARS) அல்லது 2012ல் சுமார் 700 பேரை பலிகொண்ட Middle East Respiratory Syndrome (MERS) போன்று கொரோனா வைரஸ் ஆபத்தானதாக மாறாது என்று சில நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு யாரும் உள்ளாகவில்லை என்றாலும் சீனாவில் இருந்து சொந்த நாடு திரும்பும் பயணிகளுக்கு கடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.