credit ns7.tv
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிறுபான்மை மக்களுக்காக மட்டுமல்லாமல், அனைவருக்காகவுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்க அரசு எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த மம்தா பானர்ஜி, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் இந்து சகோதரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதில் 4வது மாநிலமாக மேற்கு வங்கம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.