வியாழன், 16 ஜனவரி, 2020

திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை” - கே.எஸ். அழகிரி

Image
திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டார். திமுக - காங்கிரஸ் கூட்டணியானது கொள்கை ரீதியான மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க கூடிய கூட்டணி என தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவு உண்டு எனவும் குறிப்பிட்டார். 
உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக தலைமை அறிவுறுத்தியும் கூட ஒரு சில இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும், அதற்கு கட்சி தலைமை காரணம் அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திமுக பங்கேற்காததால் கூட்டணியில் இருந்து விலகியதாக கூற முடியாது என கே.எஸ். அழகிரி குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்று முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கருத்து கிடையாது எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

credit ns7.tv