ஞாயிறு, 26 ஜனவரி, 2020

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்...!

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உலகையே புருவம் உயர்த்தி வியக்க வைத்த சீனா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கி நிற்கிறது. நோய் தாக்குதலுக்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறுவதும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொராணா வைரஸ் பாதிப்பு அந்நாட்டில் உள்ள 13 மாகாணங்களுக்கும் பரவியதோடு ஆசிய நாடுகளையும் ஐரோப்பாவையும் பீடித்திருக்கிறது.
News7 Tamil 
சீனாவில் மட்டும் இதுவரை1200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டதால் ஏறத்தாழ 5 கோடிக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
சீனாவில் இருந்து ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, நேபாளம், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற பயணிகளிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ந்து நிற்கின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவில், சென்னை  உள்பட முக்கிய விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 
News7 Tamil
நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மும்பையைச் சேர்ந்த இருவர், பெங்களூரு ஐதராபாத் நகரங்களைச் சேர்ந்த இருவர் என சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் அவர்களை தனி இடத்தில் வைத்து தீவிர கண்காணிப்புடன் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.


credit ns7.tv