09.03.2020 தமிழகத்தில் தொடர் போராட்டங்களை தடுக்க கோரி வழக்கு; கைமீறிவிடும் என அச்சம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடத்திவரும் தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை மார்ச் 11-ம்...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடத்திவரும் தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை மார்ச் 11 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இந்திய அரசமைப்புச் சட்டம் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த உரிமை வழங்கியுள்ள போதும், அதை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அனுமதியும் இல்லாமல் சில மணி நேரங்களில் ஏராளமானோர் கூடி, சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இது அபாயகரமானது எனவும் தெரிவித்துள்ளார்.
சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக மனுவில் கூறியுள்ள அவர், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் நடந்துவரும் தொடர் போராட்டத்தை சட்டப்படி தடுக்காவிட்டால் நிலைமை கை மீறிச் சென்று விடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மார்ச் 11 ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கையும், நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து மார்ச் 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
credit indianexpress.com