புதன், 11 மார்ச், 2020

மத்திய பிரதேசத்தில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு? March 11, 2020

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகியுள்ள நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களுள் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 20க்கும் மேற்பட்டோர், பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக, கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடிதம் அனுப்பியுள்ளார். மாநில மக்களுக்காக பணியாற்ற முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மட்டுமல்லாது, தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களுள் ஒருவராக உருவெடுத்தார். இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆலோசனை நடத்தினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், போபாலில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடினர். அவர்கள் 5 பேருந்துகள் மூலம் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பேருந்தில், ஆடல் பாடலுடன் பாஜக எம்எல்ஏக்கள் உற்சாகமாக புறப்பட்டனர். 
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவளிக்கும் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென பதவி விலகியதால், மத்தியபிரதேச அரசு நீடிப்பதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இதையடுத்து, முகுல் வாஸ்னிக், ஹரிஸ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் போபாலுக்கு விரைந்துள்ளனர். தற்போது, கட்சியில் நீடிக்கும் எம்எல்ஏக்களை தக்க வைக்கும் முயற்சியாக, அவர்கள் அனைவரையும், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளதால் மத்தியபிரதேசத்தில் ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை என அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கமல்நாத், பெரும்பான்மையை நிரூபிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  
ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் அடுத்த வாரம் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், பாஜக சார்பில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு மத்திய அரசில் கேபினட் அமைச்சர் பதவி வழங்க பாஜக முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
credit ns7.tv