கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கணபதி வேதாம்பாள் நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் கடந்த 5-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் சரவணம்பட்டி பகுதியில் காலை வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்ததில் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்ற சடையாண்டி மற்றும் அகில் என்பது தெரியவந்தது .
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். பாஜக உறுப்பினரான பாண்டியும், அகில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சார்ந்த அகிலும், இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி வாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது.
credit ns7.tv