சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை காஷ்மீர் அரசு விடுவித்துள்ளது. வீட்டுக்காவலில் வைத்தது முதல் விடுதலை செய்யப்பட்டது வரை நடந்தது என்ன?
காஷ்மீரை ஆண்ட முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளிவராத மர்மமாகவே நீடித்தன.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி நாடாளுமன்றத்தில் சட்டமாக்கினால் அசாதாரண சூழல் நிலவும் என எண்ணியது மத்திய அரசு. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சட்டப்பிரிவு நீக்கம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க, காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக தலைவர்களின் வீட்டுக்காவலை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனிடையே பரூக் அப்துல்லாவை சந்திக்க அனுமதி கோரி வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியுலகிற்கு தெரியாமலே இருந்தது.
இப்படி காலங்கள் நகர்ந்து கொண்டிருக்க, சுமார் 7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்தது ஜம்மு காஷ்மீர் அரசு. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியுலகிற்கு வந்த பரூக் அப்துல்லா, தனது விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற தலைவர்களையும் மத்திய அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் நாடாளுமன்றத்திற்கு சென்று உரையாற்ற ஆவலாக உள்ளேன் எனவும் பரூக் அப்துல்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததால் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
credit ns7..tv