சட்டபேரவைக் கூட்டதொடரில் நேரம் இல்லா நேரத்தின் போது பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் என்ன விளக்கம் அளிக்கப்பட்டது என்பதை பேரவையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இதுதொடர்பாக தனிப்பட்ட அமைப்பை மட்டும் கூட்டி கருத்துக்களை கேட்காமல் தமிழகத்தின் அனைத்து கட்சியையும் அழைத்து கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை அழைத்து தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் NRC, NPR, CAA குறித்த அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டதுடன் அரசு தரப்பில் அதிகார வரம்புக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமன்றத்தில் NRC, NPR, CAA குறித்து பேரவையில் முதல்வர் விவாதித்த கருத்துக்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எந்தவித ஆவணமும் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவாக தெரிவித்ததன் அடிப்படையில் மக்கள் அட்சப்பட தேவையில்லை என்று தெரிவித்த அமைச்சர், சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், அமைதி பூங்காவாக இருக்கும் அனைத்து மக்களையும் காப்பதன் நோக்கத்திலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார்.
மேலும், போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் அரசு எடுக்கப்பட்டுவரும் நிலையிலும் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நிலையிலும் அனைத்து கட்சி கூட்டம் தேவையா என அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும், உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பது அரசின் கடமை என்று கூறிய அவர், NRC, NPR, CAA ஆகிய திட்டங்கள் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். இந்த விவாதத்தின் போது பேச அனுமதிக்காததால் ஐ.யூ.எம்.எல் உறுப்பினர் அபுபக்கர் வெளிநடப்பு செய்தார்.
credit news18tamil nadu