செவ்வாய், 17 மார்ச், 2020

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை - தமிழக அரசு அதிரடி

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தாக்குதலை தொடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இருவர் பலியாகியுள்ளனர். 13 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். என்றாலும் அண்டை மாநிலங்களான கேரளாவிலும், கர்நாடகாவிலும் கொரோனா தனது பிடியை இறுக்கியுள்ளது.
இதன் காரணமாக 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மார்ச் 31வரை விடுமுறை அறிவித்தது தமிழக அரசு. அத்துடன் எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் மத்திய அரசின் அறிவுத்தலை தொடர்ந்து பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தற்போது தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை:
அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் வரும் மார்ச் 31 வரை விடுமுறை.
எனினும் அரசுத் தேர்வுகள் (10 -12ம் வகுப்பு), கல்லூரி, நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் செயல்படும் பயிற்சி மையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூர்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு.

திரையரங்குகள் :
தமிழகத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், சுற்றுலா தங்குமிடங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மார்க் பார்கள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் வரும் மார்ச் 31 வரை மூடப்படும்.
சுற்றுலா செல்வதை தவிருங்கள்:
பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதி, வெளியில் செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். புதிய நிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகம் போல மேற்குவங்காளம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
credit nstv