புதன், 1 ஏப்ரல், 2020

கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம்

கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

நேற்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி விளக்கமாக எடுத்துரைத்தார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி ஆகியோர் இருந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 1.5 கோடி முகக்கவசம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,


N95 முகக்கவசம் 25 லட்சமும், 2500 வெண்டிலேட்டர்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் சென்று வந்தவர்கள்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதித்துள்ளனர். அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், மாநாடு சென்று வந்தவர்களை முழுமையாகக் கண்டறிந்தால்தான் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும், அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திருப்பூரில் அதைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறையில் இருப்பவர்களும் முகக்கவசம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டு வாடகையை யாரும் கேட்கக் கூடாது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை, போதுமான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை சிறப்பாகச் செய்து வருகிறது என்றார். யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது, அதையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
credit news 18 tn