ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

உலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை

மனிதநேயம் இறுதியில் தொற்றுநோயை வெல்லுமா? கொரோனா வைரஸ் குறித்த தன் எண்ணத்தை தமிழ் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அதை இங்கு கொடுத்துள்ளேன்.
ப.சிதம்பரம், கட்டுரையாளர்.
உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரையில், 205 நாடுகள் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட் – 19ஆல் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் எனப்படுவது நுண்ணிய தொற்று ஏற்படுத்தக்கூடிய வாழும் உயிரினத்தின் உடலினுள் தங்கி வாழ்வதாகும். வைரஸ்கள், பாக்டீரியா உள்பட  அனைத்து வகை உயிரினத்தையும் பாதிக்கும் வல்லமை கொண்டவை. இந்த செய்திக்கு வைரஸ் குறித்த இந்த தகவல் போதுமானது.
கோவிட் – 19 என்பது புதிய வைரசால் ஏற்பட்ட தொற்றுநோய்க்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கிய பெயர். முதலில் இந்த வைரசை நோயாளிகளில் பார்த்த லீ வெண்லியாங் என்ற சீன மருத்துவர் புதிய வைரஸ் என்று டிசம்பர் 2019ம் ஆண்டு கூறினார். அதற்காக அவரை சீன அரசு துன்புறுத்தியது. அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது. அவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு, தனது 33வது வயதில் பிப்ரவரி 7ம் தேதி 2020ம் ஆண்டு இறந்தார். (அதிகாரிகள் அவரது மரணத்திற்கு பின் அவரிடம் மன்னிப்பு கோரினர்) அவர் பார்த்த அந்த புதிய வைரஸ் 100 நாட்களுக்குள் உலகம் முழுவதும் விரைவாக பரவிவிட்டது.
கோவிட் – 19ஐ நாட்டின் எல்லைகளில் நிறுத்த முடியாது. அதற்கு தேசிய எல்லைகள் கிடையாது, அது எந்த மதத்தினரையும் பாகுபடுத்திப்பார்க்காது. அதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், பாலினம் மற்றும் பிறப்பிடம் என்று எதுவும் கிடையாது. இந்திய அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 14 மற்றும் 15ஐ கொரோனா வைரஸ் அப்படியே மதிக்கிறது என்று கூறலாம்.
சக்தியில்லாத தலைவர்கள்
பூமியிலேயே சக்திவாய்ந்த மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே உதவியின்றி, ஏப்ரல் 3ம் தேதி 2, 13,600 என்ற தொற்று ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதுதான் உலகிலேயே அதிகமான அளவு. இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் முதல் 2.40 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவம் ஒன்றும் செய்ய முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது.
உலகிலேயே பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவாமல் இருக்கிறது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பலம் வாய்ந்த டாலர் தற்போது, யூரோ அல்லது யன்னைவிட பலவீனமடைந்ததாக உள்ளது. இன்னும் சில அரசுகள், தேர்ந்தெடுக்கப்பட்டதோ அல்லது கைப்பற்றப்பட்டதோ, தங்கள் நாட்டை அதன் குடிமக்களின் ஒப்புதலுடன் ஆள வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களின் செயல்கள் எவ்வளவு வெற்றுத்தனமானவை என்று இன்று தெரிகிறது. யாரையும் மதிக்காத உத்தரவுகள், வாழ்நாள் முழுவதும் ஆதிக்க எண்ணம், முத்திரை பாராளுமன்றங்கள், நட்பு நீதிமன்றங்கள், வளைந்துகொடுக்கும் முகவர்கள, உளவாளிகள் மற்றும் அதிகளவில் தவறாக பயன்படுத்தப்பட்ட ஒன்று, அரசியல் எதிரிகளை, எவ்வித குற்றமிழைக்கவில்லையென்றாலும், மாதக்கணக்கில் அல்லது ஆண்டுகணக்கில் ஜெயிலில் அடைப்பது என்பது ஆகிய அனைத்தும் வெற்று என்பது தெரிந்துவிட்டது.
அடக்குமுறை மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்
அடக்குமுறையாளர்களுக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டும்: இந்த ஒட்டுமொத்த உலகமும் சிறைச்சாலையாக மாறிவிட்டது. அடக்குமுறையாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் இருவரும் ஒரே சிறைசாலையில் உள்ளனர் என்பது முரணல்ல தானே? நீங்கள் தற்போது ஊரடங்கில் இருப்பதால், இதோ நீங்கள் விளையாட உங்களுக்கு ஒரு விளையாட்டு. உங்கள் லேப்டாப் அல்லது போனில் உலக வரைபடத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொரு நாடாக அடையாளம் காட்ட சொல்லுங்கள். ஒரு கேள்வியையும் கேளுங்கள். அந்த நாடு எவ்வித குற்றமும் இன்றி மக்களை சிறையில் தள்ளுமா என்ற கேள்வியையும் கேளுங்கள். நீங்கள் கண்டறிவது என்னவாக இருக்கும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே. தென் அமெரிக்காவிலிருந்து துவங்குவோம்.
வெனிசுலா : அதிபர் நிக்கோலஸ் மதுராவின் கைப்பாவையாக உள்ள நீதித்துறையால் 30 எதிர்கட்சித் தலைவர்களின் நாடளுமன்ற பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் உள்ளனர். இதே ஆப்ரிக்காவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
எத்தியோப்பியா: 2018ம் ஆண்டு அபி அகமது பிரதமரானார், எரித்திரியாவுடன் அமைதியை ஏற்படுத்தி, நோபல் பரிசை வென்றார். ஆனாலும் 2019ம் ஆண்டு இணையதள வசதிகளை நீக்கினார். 64 நீதித்துறை கொலைகள் நடந்துள்ளதாக ஒரு தொண்டு நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 1,400 தடுப்புகாவல்கள் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளது.
தான்சானியா: அதிபர் ஜான் மகுபுளி, எதிர்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கைதுசெய்தார். ஊடகங்களை முடக்கினார். அதிருப்தியாளர்களின் கூச்சலை கட்டுப்படுத்த சட்டமியற்றினார்.
ஐரோப்பாவில் கலவையான நிலை உள்ளது. அங்கு பலமான மற்றும் கொண்டாடக்கூடிய ஜனநாயகங்கள் உள்ளன. அவைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹங்கேரி: பிரதமர் விக்டர் ஆர்பன், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை சீரமைத்தார். அவரது அரசு ஐரோப்பிய மத்திய பல்கலைக்கழகத்தை மூட வற்புறுத்தியது. முதல் இணையதள வரியை விதித்தது. மார்ச் 30 அன்று ஆர்பன் அவசர நிலை சட்டத்தை இயற்றினார். அது அவருக்கு ஆணைப்படி ஆட்சி செய்யும் உரிமையை வழங்குகிறது. அதை எவ்வளவு நாள் தேவை என்று அவர் கருதுகிறாரோ அதுவரை வைத்துக்கொள்ளலாம்.
ரஷ்யா: அதிபர் விளாடிமிர் புடின், அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் அவரது ஆட்சிகாலத்தை பூஜ்யத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். மாஸ்கோவில் ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடினர், அதிகாரிகள் லத்தி மூலம் அவர்களுக்கு பதிலளித்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். சிலர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. அரசியில் எதிர்கட்சியினர் கைது செய்யப்பட்டனர், போலீசாரால் வன்முறை நடைபெற்றது, குழந்தைகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர், பெற்றோர்களுக்கு பொது இடத்திலே அச்சுறுத்தல் செய்யப்பட்டது, 200க்கும் மேற்பட்ட அரசியல் சிறைக் கைதிகள் அந்நாட்டில் உள்ளனர்.
ஆசியா: நாட்டுக்கு நாடு சுதந்திரத்தின் அளவு மாறுபடும். சிலவற்றை ஜனநாயகம் என்றே கூற முடியாது.
தாய்லாந்து: 2019ம் ஆண்டு புதிய பிரதமர் பிராயூத் சான்ஓசா பதவியேற்று, புதிய அரசை அமைத்தார். அரசியல் நடவடிக்கைகளுக்காக தாக்குதல் நடைபெற்றுள்ளது. மனித உரிமை பாதுகாவலர்கள் காணாமல் போயுள்ளனர். கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் சட்டங்களே உள்ளன.
கம்போடியா: 2018ம் ஆண்டு தேர்தல் கடுமையான அடக்குமுறை சூழலில், வாக்காளர்களுக்கு எவ்வித அர்த்தமுள்ள தேர்வுகளுமின்றி நடைபெற்றது. முக்கிய எதிர்கட்சியே தடை செய்யப்பட்டது. எதிர்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். சுதந்திரமான ஊடகம் மற்றும் பொதுமக்களின் சுதந்திரம் ஆகியவை குறைக்கப்பட்டன. ஆளுங்கட்சி இரண்டு அவைகளிலும், அனைத்து இடங்களையும் வென்றது.
மனிதநேயமே வெல்லும்
நீங்கள் நம்பிக்கையை இழக்கும் முன், உங்களிடம் கேளுங்கள், ஏன் எந்தவொரு பலமான தலைவராலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க முடியவில்லை? மனிதநேயம் இறுதியில் தொற்றுநோயை வெல்லுமா? கொரோனா வைரஸ் குறித்த தன் எண்ணத்தை தமிழ் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அதை இங்கு கொடுத்துள்ளேன்.
அணுவைவிட சிறியது
அணுகுண்டைவிட அழிவை ஏற்படுத்தக்கூடியது
சத்தமின்றி நுழைகிறது உடலில்
போரின்றி எடுக்கிறது உயிரை
மனிதன் நிர்மூலமாக்குவான்
இந்த கொரோனாவையும்
தொற்றுநோயை அவனே
வெற்றிகொல்வான்
கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் மனிதநேயம் வெல்லும்போது, சர்வாதிகாரிகள் மற்றும் கொடுங்கோலர்களிடம் இருந்து, மனிதநேயம் அதன் சுதந்திரத்தை பெறும்.
இக்கட்டுரையை எழுதிய ப. சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர்.
தமிழில்: R. பிரியதர்சினி.