திங்கள், 1 ஜூன், 2020

காசிமேட்டில் மதிப்பு - மரியாதையை இழந்த கொரோனா

கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் 5 வது முறையாக ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழகத்தை இவ்வளவு மோசமாக ஆட்டுவிக்கும் என இந்திய அரசே எதிர்பார்த்திருக்காது.

வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் இன்னும் விஸ்ரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னைவாசிகள் வைரஸை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வெளியே சுற்றுகிறார்கள்.

கோயம்பேடு மார்க்கெட் வரலாறு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மக்கள் அங்கே எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. மாஸ்க், கிருமிநாசினி என எதையும் மதிக்கவில்லை. விளைவு, கோயம்பேடு மார்க்கெட்டில் பரவிய வைரஸ் பலருக்கும் மருத்துவமனையில் கட்டில் ஒதுக்கிக் கொடுத்தது. கோயம்பேடு சந்தை விவகாரத்தில் தமிழக அரசே மெத்தனமாக இருந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.

இந்நிலையில் இன்று காலை மீன் வாங்க பெரும் கூட்டம் சென்னை காசிமேடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் கூடியது.

சமூக விலகலாவது இதுவாவது என்பது போன்று மக்கள் நெருக்கமாக நின்று மீன் வாங்கியுள்ளனர்.

மாஸ்க் அணிந்து கொண்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று மக்கள் நம்பிவிட்டார்கள் போல… எங்கு சென்றாலும் அதை ஒன்றை அணிந்து கொள்கிறார்கள். மற்றபடி எந்த ஒழுங்குமுறையையும் பின்பற்றுவதில்லை.

மீன் குழம்பும், அதன் வாசனைக்கு ஆசைப்பட்ட மக்களுக்கு, இன்னும் எத்தனை மருத்துவமனை கட்டில்களை கொரோனா அலங்கரிக்க காத்திருக்கிறதோ!!