செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

வரலாற்றில் ஒரு மைல்கல்.. சுதந்திர தினத்தில் 50வது வயதை எட்டும் பின்கோடு வரலாறு

 

75 வது சுதந்திர தினம், நாட்டின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லுடன் ஒத்துப்போகிறது – ஆகஸ்ட் 15, 1972 அன்று தான் இந்தியாவில் பின்கோடு (PIN) அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அது தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பின்கோடு வரலாறு மற்றும் பரிணாமம் குறித்து இப்போது பார்க்கலாம்.

பின்கோடு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

தபால் துறையின் கூற்றுப்படி, சுதந்திரத்தின் போது இந்தியாவில் 23,344 தபால் நிலையங்கள், முதன்மையாக நகர்ப்புறங்களில் இருந்தன. ஆனால், நாடு வேகமாக வளர்ந்து வந்ததால், தபால் வலையமைப்பும் அதற்கேற்ப வேகமாக செயல்பட வேண்டியிருந்தது.

PIN குறியீடானது, பெரும்பாலும், ஒரே அல்லது ஒத்த பெயர்களைக் கொண்ட வெவ்வேறு இடங்கள் மற்றும் பலவிதமான மொழிகளில் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கும் நாட்டில், அஞ்சல்களை வரிசைப்படுத்துதல் மற்றும் டெலிவரி செய்யும் செயல்முறையை எளிதாக்குவதாகும்.

பின்கோடு எப்படி வேலை செய்கிறது?

பின்கோடு ஆறு இலக்கங்களால் ஆனது. முதல் எண் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அஞ்சல் பிராந்தியத்தைக் குறிக்கிறது ; மற்றும் எண் 9, இராணுவ தபால் சேவையை குறிக்கிறது. 2வது எண் துணைப் பகுதியை (sub-region) குறிக்கிறது, 3வது வரிசைப்படுத்தும் மாவட்டத்தைக் குறிக்கிறது. மீதமுள்ள எண்கள் டெலிவரி செய்யும் குறிப்பிட்ட தபால் நிலையத்திற்கான’ புவியியல் அமைப்பை மேலும் சுருக்குகிறது.

இந்த முயற்சியின் பின்னணியில் இருந்தவர் யார்?

இந்த முயற்சியின் பின்னணியில் இருந்தவர், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தபால்கள் மற்றும் தந்தி வாரியத்தின் மூத்த உறுப்பினருமான ஸ்ரீராம் பிகாஜி வேலங்கர் ஆவார்.

வேலங்கார் ஒரு சிறந்த சமஸ்கிருதக் கவிஞர், அவர் மும்பையில் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1996 இல் சமஸ்கிருதத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றார். சமஸ்கிருதத்தில் வேலங்கரின் 105 புத்தகங்கள் மற்றும் விலோம காவ்யா நாடகம் தலைசிறந்த இலக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது.

வேலங்கார், மும்பையில் தேவ வாணி மந்திரம் என்ற கலாச்சாரக் குழுவை உருவாக்கினார், இது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சமஸ்கிருதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேலை செய்தது.

1973 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற இண்டிபெக்ஸ் எனப்படும் உலக அஞ்சல்தலை கண்காட்சியின் தலைவராகவும் வேலங்கர் இருந்தார், இதில் 120 நாடுகள் இடம்பெற்றன. அவர் டிசம்பர் 31, 1973 அன்று தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

உலகம் முழுவதும் பின்பற்றப்படும் சில அமைப்புகள் என்ன?

உலகளவில், அமெரிக்காவில், அஞ்சல் விநியோகத்தின் வேகத்தை மேம்படுத்துவதற்காக, ஜூலை 1, 1963 இல் மண்டல மேம்பாட்டுத் திட்டம் (ZIP) குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் கூற்றுப்படி, “பழைய முறையின் கீழ் கடிதங்கள் 17 வரிசைப்படுத்தல் நிறுத்தங்கள் வழியாக சென்றன – ஆனால் புதிய அமைப்பு’ அதிக இயந்திர அமைப்புகளைப் பயன்படுத்தி நேரத்தை கணிசமாக குறைத்தன.

இங்கிலாந்தில், 1960 களின் நடுப்பகுதியில் அஞ்சல்களை வரிசைப்படுத்துவது இயந்திரமயமாக்கப்பட்டது.

“இயந்திரமயமாக்கலுக்கான திறவுகோல் ஒரு alphanumeric (எண், எழுத்து இரண்டையும் பயன்படுத்துகிற) அஞ்சல் குறியீடு ஆகும், இது கேரியரின் விநியோக பாதை உட்பட கையாளுதலின் ஒவ்வொரு கட்டத்திலும் இயந்திரம் மூலம் வரிசைப்படுத்துவதாகும்.

கோடிங் கருவியானது அஞ்சல் குறியீட்டை புள்ளிகளின் வடிவமாக மாற்றுகிறது, இதன் மூலம் இயந்திரங்கள் கையால் வரிசைப்படுத்துவதை விட எட்டு மடங்கு வேகத்தில் அஞ்சலை வரிசைப்படுத்த முடியும்” என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தெரிவிக்கிறது. ஜப்பான் தனது அஞ்சல் குறியீடு முகவரி அமைப்பை ஜூலை 1968 இல் உருவாக்கியது.

பின்கோடு இன்னும் தொடர்கிறதா?

இணையத்தின் பரவலுடன், மக்கள் குறைவான கடிதங்களை அனுப்பும்போது, ​​பின்கோடு தொடர்பு குறித்து கேள்வி எழுப்புவது எளிது. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் உணவு டெலிவரி அல்லது பார்சலை ஆர்டர் செய்ய முயற்சிக்கும் போது, இந்தியாவில் வேலங்காரின் பணியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும்.


source https://tamil.indianexpress.com/explained/independence-day-2022-india-pin-code-history-494559/