One Nation One Entrance: JEE (Main), NEET to be merged with CUET for students’ benefit, says UGC Chief: அடுத்த கல்வியாண்டில் இருந்து பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வுகளை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுடன் (CUET-UG) இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகளை ஆராய நிபுணர்கள் குழுவை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்க உள்ளது.
இதுகுறித்து யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜே.இ.இ (மெயின்) மற்றும் நீட் தேர்வுகளை CUET என்ற பெரிய குடையின் கீழ் கொண்டு வருவது மாணவர்களின் சுமையை குறைக்கும், மேலும் இந்த யோசனை தேசிய கல்விக் கொள்கை, 2020 உடன் ஒத்துப்போகிறது என்று கூறினார். JEE (மெயின்) தேர்வு என்பது நாட்டிலுள்ள முதன்மையான பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும். NEET என்பது அனைத்து இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும்.
தற்போது நடைபெற்று வரும் CUET-UG தேர்வு, 2023-24 ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறையாவது நடைபெற வாய்ப்புள்ளது என்று ஜெகதேஷ் குமார் கூறினார். மேலும், பொது நுழைவு தேர்வு மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டிய தேவையை நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“CUET அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது நாட்டில் மூன்று முக்கிய நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அவை NEET, JEE மற்றும் CUET. மேலும் பெரும்பாலான மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் குறைந்தது இரண்டு தேர்வுகளை எழுதுகிறார்கள், மேலும் பலர் மூன்று தேர்வையும் எழுதலாம். நீட் தேர்வில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களும், ஜே.இ.இ. தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களும் உள்ளன. எனவே, இரண்டு பாடங்கள் எப்படியும் பொதுவானவை மற்றும் அதே பாடங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கு தேவையான CUET நுழைவுத் தேர்விலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நாம் ஏன் மாணவர்களை பல நுழைவுத் தேர்வுகளுக்கு உட்படுத்த வேண்டும்,” என்று ஜெகதேஷ் குமார் indianexpress.com இடம் கூறினார்.
தேர்வுகள் எப்போது இணைக்கப்படும்?
இந்த யோசனை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று UGC தலைவர் ஜெகதேஷ் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் மாணவர்களுக்கான இந்த புதிய பொது நுழைவுத் தேர்வு தொடங்கப்படுவதற்கு முன்பு தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய ஜெகதேஷ் குமார் விரும்புகிறார். முதலில், தற்போதுள்ள நுழைவுத் தேர்வு செயல்முறைகளை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவை யு.ஜி.சி அமைக்கும். “அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரே CUET தேர்வின் சாத்தியத்தையும் பார்த்து, பரிந்துரைகளுடன் வருவார்கள். பின்னர், இந்த பரிந்துரைகள் பங்குதாரர்களின் கருத்துக்காக வைக்கப்படும், மேலும் பின்னூட்டத்தின் அடிப்படையில் பரிந்துரை இறுதி செய்யப்படும்” என்று ஜெகதேஷ் குமார் விளக்கினார்.
“இதற்கான காலக்கெடு என்று வரும்போது, நாங்கள் இந்த விவாதத்தை இப்போது தொடங்கியுள்ளோம், அடுத்த ஆண்டு தேர்வை நடத்த விரும்பினாலும், ஒரு வருடம் அவகாசம் உள்ளது, மேலும் இது மாணவர்களையும் மற்ற பங்குதாரர்களையும் மனரீதியாக தயார்படுத்தும், அற்கான சாத்தியம் உள்ளது, ஆச்சரியப்படத்தக்க வகையில் எதுவும் இருக்காது,” என்று யு.ஜி.சி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறினார்.
அடுத்த ஆண்டு முதல் CUET தேர்வு ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடத்தப்படலாம் என்றும் ஜெகதேஷ் குமார் கூறினார். மேலும், “வரும் வருடத்திலோ அடுத்த வருடத்திலோ ஒரு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம், ஆனால் அதை ஒரு வருடத்தில் பல முறை, அல்லது ஒரு வருடத்தில் இரண்டு முறை நடத்தினால், மாணவர்கள் தேர்வை இரண்டாவது முறையாக எழுதி, தாங்கள் விரும்பிய துறைகளில் சேர்க்கை பெற வாய்ப்பு பெறலாம்,” என்றும் அவர் விளக்கினார்.
யு.ஜி.சி மற்றும் தேசிய தேர்வு முகமை தேர்வு எழுதும் எண்ணிக்கையில் எந்த வரம்பையும் நிர்ணயம் செய்யாததால், நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், எந்த வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாது என்றும் யு.ஜி.சி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறினார்.
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம்
புதிய மற்றும் மறுவரையறை செய்யப்பட்ட CUET-UG ஆனது NCERT பாடத்திட்டத்தை பின்பற்றும் மற்றும் JEE மற்றும் NEET தொடர்பான பாடங்கள் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க NTA க்கு அறிவுறுத்தப்படும். இது, மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறவும், அவர்களுக்கு அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்று ஜெகதேஷ் குமார் கூறினார்.
பயிற்சி கலாச்சாரம் நம் நாட்டில் பல தசாப்தங்களாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜெகதேஷ் குமார், குறிப்பாக நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளில், மாணவர்கள் படித்த பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறுவதை உறுதிசெய்வதால், மாணவர்கள் அவர்கள் தங்கள் வாரியத் தேர்வுகளுக்கு நன்றாகப் படித்து, நன்றாகக் கற்பவராக மாறுவதில் கவனம் செலுத்தினால், அது அவர்களுக்கு CUET தேர்வில் சிறப்பாகச் செயல்பட உதவும் என்பதை அறியலாம், என்று கூறினார்.
CUET இன் மோசமான தேர்வு நடைமுறை பற்றிய சர்ச்சை
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல தேர்வு மையங்களில் CUET-UG 2022 இரண்டாம் கட்டத் தேர்வை முறையாக நடத்த முடியாமல் NTAவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று பெரிய நுழைவுத் தேர்வுகளையும் ஒன்றாக இணைப்பது NTA மீது அதிக அழுத்தத்தை உருவாக்கும் என்று மாணவர்கள் இப்போது கவலைப்படுகிறார்கள்.
இருப்பினும், யு.ஜி.சி தலைவர் ஜெகதேஷ் குமார், ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடந்த தேர்வில் இருந்து NTA கற்றுக்கொண்டதாகவும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் அதன் பிழைகளை சரிசெய்துள்ளதாகவும் கூறினார். இது தவிர, NTA ஆனது இப்போது நாடு முழுவதும் குறிப்பிட்ட தேர்வு மையங்களை அமைக்கும், அவை கணினிகள் மற்றும் பிற தேவைகளுடன் நன்கு பொருத்தப்பட்டிருக்கும், மேலும் NTA ஆல் நிர்வகிக்கப்படும். இந்த NTA தேர்வு மையங்கள், பிற நிறுவப்பட்ட மையங்களுடன், அத்தகைய தேர்வுகளுக்கு குறிப்பாகப் பயன்படுத்தப்படும், என்றும் அவர் கூறினார்.
“இந்த மையங்கள் பின்னர் பயிற்சி மையங்களாகப் பயன்படுத்தப்படலாம், NTA அவற்றில் எந்த தேர்வையும் நடத்தாதபோது, இடத்தை பயிற்சிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/education-jobs/jee-neet-to-be-combined-with-cuet-for-betterment-of-students-ugc-chief-493835/