ஞாயிறு, 5 நவம்பர், 2017

​நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரிகள் நிரம்பி உபரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் கடும் பாதிப்பு..!

Image

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கனமழை காரணமாக, நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த 5 தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, கூடுவாஞ்சேரி ஏரி பகுதிகளில் அமைந்துள்ள மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தும், ஏரியினுள் உள்ள மின்கம்பங்கள் நீர் நிலைகளில் விழும் நிலையில் உள்ளதால் அவற்றை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் தங்கள் வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரவின் நாயர், அருண் தம்புராஜ், கண்னன், டி.ஆனந்த், தினேஷ் ஆலிவால், ஜான் லூயிஸ் லல், அருண் தயாளன், ஆகிய 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், நிவாரணப் பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
முதல்வர் பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.