வியாழன், 9 நவம்பர், 2017

எண்ணூரில் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்திற்கு மனித தவறுகளே காரணம்: அறிக்கையில் தகவல் November 8, 2017

Image

சென்னை எண்ணூருக்கு அருகில் கப்பல்கள் மோதி எண்ணெய் கசிந்த விபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குனரகம் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், விபத்திற்கு முழுக் காரணம் அந்நேரத்தில் இரண்டு கப்பல்களையும் இயக்கியவர்களின் கவனக்குறைவுதான் என குறிப்பிட்டுள்ளது. 

டான் காஞ்சிபுரம் கப்பல் எதிரில் இருக்கிறது என்ற எச்சரிக்கையோடு பி.டபிள்யு கப்பல் இல்லை என்றும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.டபிள்யு மேபிள் கப்பல் ஊழியர்கள் விபத்துக்கு முன்தினம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, அதிக நேரம் பணி செய்த சோர்வினாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கப்பல் இயக்கும் குழுவில் விபத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்றும் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எரிபொருள் டாங்கில் உள்ள 2 டன் எண்ணெய் மட்டும் தான் கசிந்திருக்கும் என தவறாக கணக்கிடப்பட்டதால், உடனடியாக கசிவை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2 டன் எண்ணெய் தான் கசிந்துள்ளது என துறைமுகம், கப்பல் போக்குவரத்துத்துறைக்கு தகவல் அனுப்பியதால் கசிவைத் தடுக்க குறைவான நபர்களே பணியமர்த்தப்பட்டனர் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துகாலத்தில் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து டான் காஞ்சிபுரம் கப்பலின் பயிற்சி மாலுமிகளுக்கு போதிய பயிற்சியும் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் கப்பல் நிர்வாகத்தால் சரியாக எந்த டாங்கியில் கசிவு என்பதை கணிக்க இயலவில்லை என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை விதிகள் முறையாக பின்பற்றவில்லை எனவும்  மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.