வியாழன், 9 நவம்பர், 2017

​வி.கே. சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை! November 9, 2017

Image

வி.கே. சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். 

ஜெயா டி.வி. மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்களின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமனின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை திடீரென அதிரடி சோதனைகளை தொடங்கினர். ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சசிகாலாவின் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என அனைவரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். 

நாடுமுழுவதும் சசிகலாவிற்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கிட்டதட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, மன்னார்குடி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சசிகலாவிற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 

டிடிவி தினகரனின் வீட்டிற்கு முதலில் வருமான வரித்துறையினர் செல்லவில்லை, இதனால் டி.டி.வி. தினகரன் வீட்டைத் தவிர மற்ற இடங்களிலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தான் சோதனை நடைப்பெற்றுவருகிறது என செய்திகள் வந்தன. ஆனால் காலை 8 மணியளவில் தினகரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த இரண்டு அதிகாரிகள் அங்கேயும் சோதனையை தொடங்கினர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரது வீட்டிற்கு தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வு எடுத்த கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்த தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவிற்கு தொடர்புடைய அனைவரின் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருவது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினகரனை அச்சுறுத்தவே வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு செயல்படுவதாக தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், புகழேந்தி மற்றும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.