நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில், அவரது பங்குதாரர் சுப்ரமணியம் ஆகியோரது வீடுகள் உட்பட 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள செந்தில் வீட்டில் இன்று காலை முதல் வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், செந்திலின் தொழில் பங்குதாரரும், எம்.ஜி.நகரில் வசித்து வருபவருமான மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சுப்பிரமணியம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல், மோகனூர் சாலை காந்தி நகரில் வசித்து வரும் TNPSC உறுப்பினர் ஏ.வி. பாலுசாமியின் வீடு மற்றும் அலுவலகம், முல்லைநகரில் உள்ள வழக்கறிஞர் செந்திலின் உதவியாளர் வழக்கறிஞர் பாண்டியனின் வீடு, ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மட்டுமின்றி, கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை:
கோவையில் மணல் குத்தகைதாரர் ஆறுமுகச்சாமி என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மர வியாபாரி சஜீவனின் கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் இருந்து 6 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி:
திருச்சியில் சசிகலா உறவினர் கலியபெருமாளின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருச்சி மங்கம்மாள் சாலையில் உள்ள இளவரசியின் உறவினரும், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவருமான கலியபெருமாள் இல்லத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சோதனையில் மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் தலைமையிலான 6 போர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருச்சியில் ராஜா காலணியிலுள்ள சசிகலாவின் உறவினர் சிவகுமார் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த டி.டி.வி தினகரன் அணி புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் பரணி கார்த்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.