வியாழன், 9 நவம்பர், 2017

இதற்கெல்லாம் பயந்தால் வாழ முடியாது!” : ஐ.டி ரெய்டு குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து! November 9, 2017

Image

வருமான வரி சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சொந்தமான 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை குறித்து சென்னை அடையாறு இல்லம் வெளியே டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அடையாறில் உள்ள எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என்றுக் கூறிய தினகரன், சசிகலாவும், தாமும் அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார். 

அதிமுகவை அழிப்பதால் தமிழகத்தில் வளர்ந்து விடலாம் என பாரதிய ஜனதா கனவு காண வேண்டாம் என்றுக் கூறிய தினகரன், ரெய்டிற்கு காரணமானவர்கள் யாரோ அவர்களது கட்சியை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

தாங்கள் கொலைக் குற்றம் ஏதும் புரிந்துவிடவில்லை என்றுக் கூறிய டி.டி.வி.தினகரன், தன்னை 20 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் மீண்டும் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும், எதை கண்டும் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

தனது தந்தை முதல் சிறு குழந்தை வரை குடும்பத்தில் உள்ள யாருக்கும் பயமில்லை என்று குறிப்பிட்ட தினகரன், சட்டப்படியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாம் எப்போதும் தயார் என்று தெரிவித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி மக்களை பாதித்துள்ளது. இதை சொல்வதற்காகவெல்லாம் ரெய்டு விடுவார்கள் எனில் அதற்காகவெல்லாம் பயப்பட முடியாது என்றுக் கூறிய தினகரன், கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது ஏன் என்றுக் கேள்வி எழுப்பியதுடன், பாலா வரைந்த ஓவியத்தின் பிழையெனில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.