உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சீனு குமாரி என்னும் 19 வயது இளம் பெண் பாலியல் வன்புணர்வு பிரச்சனைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய உள்ளாடையை தாயாரித்துள்ளார்.
நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த பெண்களின் உள்ளாடையில் கேமரா, ஜி.பி.எஸ். கருவி மற்றும் ரகசிய எண்களால் திறக்கக்கூடிய பூட்டு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளாடை கத்தியால் கிழிக்கப்பட முடியாத அளவுக்கு புல்லட் புரூஃப் ஆடையால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆடையை வடிவமைத்த சீனு குமாரி தெரிவித்தார். இந்த உள்ளாடையை தயாரிக்க 5180 ரூபாய் செலவானதாகவும் சீனு தெரிவித்துள்ளார்.
சீனு குமாரியின் இந்த புதுமையான முயற்சியை பாராட்டிய பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் எப்படி மரியாதையுடன் பழக வேண்டும் என்றும் ஆண்களுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஆண்கள் ஈடுபட்டால் மட்டுமே அவர்களின் புகைப்படம் உள்ளாடையில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராவில் வீடியோவாக பதிவாகும். ஆனால் வேலைக்கு பேருந்திலும், மெட்ரோ மற்றும் மின்சார தொடர்வண்டிகளிலும் செல்லும் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எந்த நவீன கருவி தீர்வைக்கொண்டுவரும் என தெரியவில்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரிகளுக்கு ஏற்ப பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை மாறினால் மட்டுமே பெண்கள் இந்த சமூகத்தில் சம உரிமையுடனும், சுதந்திரமாகவும் மரியாதையுடனும் வாழ முடியும்.