வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஹூக்கா புகைப்பான்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: சென்னை கமிஷனர் எச்சரிக்கை! January 12, 2018

Image

சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஹூக்கா என்னும் குடுவை புகைப்பான்கள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். 

சென்னை மாநகரில் உள்ள சில கேளிக்கை விடுதிகள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் ஹூக்கா என்னும் குடுவை புகைப்பான்கள் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சென்னையிலுள்ள ட்ரிஸில் உணவகம் ஹூக்கா பயன்படுத்த அனுமதி கூறி அன்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிகரெட்டை விட ஹூக்கா எனும் குடுவை புகைப்பான்களில் தான் அதிகளவில் உடலுக்கு தீங்கு செய்யும் பொருட்கள் உள்ளதாகவும், இந்த ஹூக்காக்களின் மூலமாக 90 ஆயிரம் மில்லியன் லிட்டர் புகை சுவாசிக்கப்படுவதால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது என தீமைகளை தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் சென்னை நகரில் கேளிக்கை விடுதிகளிலும், நட்சத்திர உணவு விடுதிகளிலும் ஹூக்கா என்னும் குடுவை புகைப்பான்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறி பயன்படுத்தும் கேளிக்கை விடுதி, நட்சத்திர உணவகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை 
எடுக்கப்படுமென கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.