திங்கள், 8 ஜனவரி, 2018

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! January 8, 2018

Image


பொதுமக்கள் நலன்கருதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இவ்வழக்குகளை வேறொரு அமர்வுக்கு மாற்றியும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்க முடியாவிட்டால் தனியாரிடம் ஒப்படைக்கலாமே? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின்னால் திமுக உள்ளது என பதிலளித்தார். அதனை கேட்ட நீதிபதிகள், போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இப்போராட்டத்தால் யாருக்கு பாதிப்பு என உணர்ந்தீர்களா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

ஊழியர்கள் போராட்டத்தால் தாமோ, வழக்கறிஞர்களோ, சொகுசு கார்களில் செல்லும் அமைச்சர்களோ பாதிப்படைய போவதில்லை எனவும், ஏழைமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்கள் நலன் கருதி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு உடனே திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அளிக்காமல் பணிநீக்கம் செய்யக்கூடாது என அரசுக்கு அறிவுறுத்தியதுடன், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.