திங்கள், 8 ஜனவரி, 2018

​உத்திரப்பிரதேசத்தில் மதவழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற உத்தரவு! January 8, 2018

Image

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் ஒலிபெருக்கிகளை அனுமதியின்றி பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. வருகின்ற ஜனவரி 10ம் தேதிக்குள் மாநில முழுவதிலும் உள்ள ஒலிபெருக்கி பயன்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒலி மாசு தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அரசு அனுமதி பெற்றே ஒலிபெருக்கிகளை பொது இடங்களில் நிறுவ வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குள் அனைத்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது ஒலிமாசுபாட்டு விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் உள்ள பகுதிகளை தொழிற்பேட்டைகள், வணிகப்பகுதிகள், குடியிருப்புப்பகுதிகள் என பிரித்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றபடி, ஒலி  வெளியேற்று அளவு நிர்ணயிக்கப்பட உள்ளது. உதாரணமாக, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் அதிகபட்ச ஒலியளவாக 75 டெசிபலும், வணிகப்பகுதிகளில் 65 டெசிபலாகவும்,குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபலும், அமைதியாக இருக்க வேண்டிய பகுதிகளில் 50 டெசிபலும் ஒலி அளவாக நிர்ணயிக்கப்பட உள்ளது.