சனி, 5 மே, 2018

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்! May 5, 2018

Image

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்படுவதே தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் மழைவளம் குறைந்ததற்கு காரணம் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மும்பை ஐ.ஐ.டி-யின் ஆய்வில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் காணப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டதே அம்மலைத்தொடர் அமைந்துள்ள தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் - குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் - மழையளவு குறைந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவ மழையில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்திற்கு கிடைக்கும் மழையில் 25% முதல் 40% வரை மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள தாவரங்களின் தாக்கத்தால் பொழிவது தெரிய வந்துள்ளது.
 
தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் என நீளும் உலகின் முக்கிய பல்லுயிர் தன்மை வாய்ந்த பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலையில், கடந்த 1920 முதல் 2013 வரை சுமார் 33,579 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளின் பரப்பளவில் சுமார் 35.53% வரை அழிக்கப்பட்டுள்ளது இஸ்ரோவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

தோட்டங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் விவசாய நிலங்களின் பெருக்கம், நீர்த்தேக்கங்கள் அமைக்க காடுகள் அழிக்கப்படுதல் போன்றவை மேற்குத்தொடர்ச்சி மலையில் காடுகள் பரப்பளவு குறைந்ததற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளதாக கூறியுள்ள மும்பை ஐ.ஐ.டி ஆய்வறிக்கை, இது மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வாழ்க்கையை காப்பதற்கு மட்டும் அல்லாது, தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் இயற்கையான நீர் சுழற்சிக்கும் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் ஆண்டுதோறும் பெரும் சராசரி மழையளவான 960 மில்லி மீட்டரில், சுமார் 33% அளவு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பெறக்கூடியது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களில் தினமும் 3 மில்லி மீட்டர் மழை பொழிவதற்கு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள தாவரங்கள் முக்கிய பங்காற்றுவதும், இந்நீர் காவிரி சமவெளி பாசனத்திற்கு பயன்படுவதும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகள் அழிப்பு காரணமாக, தினமும் பொழிய வேண்டிய 3 மில்லி மீட்டர் மழையானது  ஒரு மில்லி மீட்டர் முதல் 2.5 மில்லி மீட்டர் வரை குறைந்துள்ளதும், ஒட்டுமொத்த அளவில் பார்க்கையில் தமிழகத்தின் மொத்த மழைப்பொழிவில் சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள காட்டின் அளவு குறைந்ததால் தமிழ்நாட்டின் வெப்பநிலை சுமார் 0.25 செல்சியஸ் அளவு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.