
நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று பல்வேறு சிரமங்களை சந்தித்தது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சிபிஎஸ்இ-யின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக, மாணவ, மாணவிகள் சந்தித்த சிரமங்கள் குறித்து, ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து, இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.
நீட் தேர்வுக்காக மகனுடன் கேரளா சென்றபோது, கிருஷ்ணசாமி என்பவர் உயிரிழந்ததையும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்வுக்கான மையங்களை ஒதுக்கி கொடுப்பது மாநில அரசின் கடமை என்றும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பியதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது, மிகப்பெரிய மனித உரிமை மீறல் எனவும் ஆணையம் கண்டித்துள்ளது.
தமிழகத்தில் போதிய தேர்வு மையங்கள் அமைக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ள ஆணையம், இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.