வெள்ளி, 25 ஜனவரி, 2019

மைக்ரோ சாட், கலாம் சாட் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்! January 25, 2019

Image
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி C-44 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்றிரவு 11.37 மணியளவில், பிஎஸ்எல்வி C-44 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் புவி மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட “மைக்ரோ சாட்- R“ மற்றும் தமிழக மாணவர் தலைமையிலான மாணவர்கள் குழு உருவாக்கியுள்ள 'கலாம் சாட்' ஆகிய 2 செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன. இதில் கலாம்சாட் செயற்கைக்கோள் எடை குறைந்தது. விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ''கலாம்சாட்'' தயாரித்த மாணவர்களை இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டினார். பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்திய மாணவர்களை இஸ்ரோ வரவேற்பதாகவும், மாணவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப இஸ்ரோ தயாராக இருப்பதாகவும் கூறினார். கலாம்சாட் செயற்கைக்கோள் தயாரித்த மாணவர்கள், இஸ்ரோவின் எதிர்காலமாக இருப்பார்கள் எனவும் சிவன் குறிப்பிட்டார். இந்தாண்டில், இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட் பிஎஸ்எல்வி C-44 என்பது குறிப்பிடத்தக்கது. 

source : ns7.tv