வியாழன், 24 ஜனவரி, 2019

ஸ்டெர்லைட் உரிமத்தை புதுப்பிக்க முடியாது....... 2-வது முறையாக மறுப்பு தெரிவித்த மாசுகட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2-வது முறையாக அனுமதி மறுத்துள்ளது. பசுமைத்தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரத்தை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரங்களை சமர்பித்தால்தான் ஆலையை திறக்க அனுமதி தரப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியில் கடந்தண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மே 28-ம் தேதி தமிழக அரசு சீல் வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இதுதொடர்பாக ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது. இக்குழுவின் அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது. இதோடு ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததுடன், 3 வாரங்களில் ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து புதிய உத்தரவு வழங்க வேண்டும், ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதேபோல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, `ஸ்டெர்லைட் ஆலையை ஜன.21-ம் தேதி வரை திறக்கக் கூடாது என உத்தரவிட்டது. இத்தடையை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதனையடுத்து தமிழக அரசின் மேல்முறையீடு தொடர்பாக பதிலளிக்க வேதாந்தா குழுமத்துக்கு உத்தரவிட்டும், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள நிபந்தனைகளை 3 வாரங்களுக்குள் நிறைவேற்றி, ஆலையை இயக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கடந்த ஜன.9-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பசுமைத்தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரத்தை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரங்களை சமர்பித்தால்தான் ஆலையை திறக்க அனுமதி தரப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உரிமத்தை புதுப்பிக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2-வது முறையாக அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468179