மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என C-voter நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 3 நிறுவனங்கள் தங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில் Republic TV மற்றும் C-voter நடத்திய கருத்துக் கணிப்பில், மொத்தமுள்ள 543 மக்களவை இடங்களில், பாரதிய ஜனதா கூட்டணி 233 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 167 தொகுதிகளையும், இதர கட்சிகள் 143 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என Republic TV, C-voter கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 39 இடங்களையும் இந்த கூட்டணி கைப்பற்றும் என்றும், பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே டிவி சேனல் மற்றும் கார்வி இன்சைட்ஸ் இணைந்து தேசத்தின் மனநிலை என்ற பெயரில் நடத்திய கருத்து கணிப்பிலும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிகபட்சமாக 237 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 166 இடங்ளும், பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 140 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்தால், பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ABP மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 233 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 167 தொகுதிகளும், மூன்றாவது அணிக்கு 130 தொகுதிகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் 71 தொகுதிகளை பாஜக கைப்பற்றிய உத்தரப்பிரதேசத்தில், வெறும் 22 தொகுதிகள் மட்டுமே இப்போது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகளில் மம்தா கட்சிக்கு 34 தொகுதிகளும், பாரதிய ஜனதாவுக்கு 7 தொகுதிகளும், காங்கிரசுக்கு படுதோல்வியும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
source: ns7.tv