உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், காந்தி நினைவு நாளில் அவரது அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்த இந்து மகாசபை அமைப்பினர், அதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே, இந்து மகாசபை அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தியின் 71வது நினைவு நாள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இந்து மகா சபையின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, என்பவரது தலைமையில், ஒரு சிலர் காந்தியின் உருவபொம்மையை பொம்மை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்து அவமரியாதை செய்தனர். அதோடு கோட்சேவைப் புகழ்ந்து முழக்கமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த வீடியோவைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தியின் உருவப்பொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீவைத்தவர்கள் , காந்தியை கொன்ற கோட்சேவின் படத்திற்கு மாலையிட்டு, கோட்சே வாழ்க என்றும் முழக்கமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவு நாளில், அவரது உருவப்பொம்மை எரிக்கப்படும், என அவர்கள் அறிவித்துள்ளதையும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலை நடத்திய இந்து மகா சபை தலைவி பூஜா ஷாகுன் பாண்டே, பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்றும், இந்த சம்பவத்தை பிரதமர் மோடியோ, மத்திய அரசோ இதுவரை கண்டிக்கவில்லை எனவும், சுட்டிக்காட்டியுள்ளார்.
காந்தியை அவமதித்தவர்களை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், இந்து மகாசபை அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, தடை செய்ய வேண்டும் எனவும், திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத கும்பலை ஊக்குவிக்கும் மோடி அரசைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், பிப்ரவரி 4-ம் தேதி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், எனவும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, காந்தியின் உருவப்பொம்மை அவமரியாதை செய்யப்பட்டதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, உத்தரபிரதேச மாநில அரசு தமது நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன்படி, இந்து மகாசபை அமைப்பின் தலைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்து மகாசபை அமைப்பின் தலைவி பூஜா ஷாகுன் பாண்டே தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும்பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
source:
http://ns7.tv/ta/tamil-news/india-important/1/2/2019/shooting-mahatma-gandhis-effigy-hindu-mahasabha-leader