ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள ஜே.கே லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாநில அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியதில், டிசம்பர் மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக மூன்று பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, பராமரிப்பின்மை, நோய்த்தொற்று, இன்குபேட்டர் இல்லாதது போன்ற காரணங்களால், பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் சொந்த தொகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில், தற்போது வரை 100 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 15 மணி நேரத்தில் மட்டும் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
credit ns7tv