திங்கள், 13 ஜனவரி, 2020

சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிக கவனத்தை ஈர்ப்பவை எவை?

Image
சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளின் அறிவியல் சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. 
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 43-வது சென்னை புத்தகக் காட்சி, கடந்த 9ம் தேதி தொடங்கியது. பல்வேறு தலைப்புகளிலும் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கான புத்தகப் பிரிவு சிறுவர்களையும், பெற்றோரையும் கவர்ந்துள்ளது. எளிதில் கிழியாத அட்டைப் படங்கள், கனமான தாள்கள் என வண்ணப் படங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கவருவதால், இதனை வாங்குவதற்கு பெற்றோர் ஆர்வம் காட்டுவதாக, வனிதா பதிப்பக உரிமையாளர் மயிலை வேலன் கூறியுள்ளார். 
book
பொன்னியின் செல்வன் உள்ளிட்ட காமிக்ஸ் வடிவிலான புத்தகங்களுக்கும் மவுசு காணப்படுகிறது. அதே போன்று டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு தேவையான புத்தகங்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளதால், குழந்தைகள் புத்தகங்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.
book
பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களும் ஒரே இடத்தில் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. 5 வயது குழந்தை முதல் 5-ம் வகுப்பு படிப்பது வரை, குழந்தை வளர்ப்பு, பாட்டி கதைகள், அறிவியல் கதைகள் என அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கிய பிறகே சமையல் கலை உள்ளிட்ட இதர புத்தகங்களை வாங்க செல்வதாக கூறுகின்றனர் பெற்றோர்.
book
புத்தக காட்சியில் அறிவியல் சார்ந்த புத்தகங்களும், வழிகாட்டி புத்தகங்களும் அதிகளவில் விற்பனையாவது, குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதையே காட்டுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

credit ns7.tv