credit ns7.tv
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்பினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று சந்தித்தனர்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா ஆகியோரும் உடன் இருந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால் தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.