வெள்ளி, 3 ஜனவரி, 2020

மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Image
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என்பது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்த திமுகவினர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். 
மேலும், இரவிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்வதால், கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆஜரான மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சுந்தரேசன், மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் வாக்குச் சீட்டு முறையில் எண்ணப்படுவதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார். 
இன்று மாலை 6 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் எனவும், வாக்கு எண்ணிக்கை நிறைவடையாத நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு தேவையற்றது எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

credit ns7.tv