வெள்ளி, 3 ஜனவரி, 2020

மாநில தேர்தல் ஆணையம் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...!

Image
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில், ஆளும்கட்சி நடத்தும் ஜனநாயகப் படுகொலைக்கு, மாநில தேர்தல் ஆணையம் துணை போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே, அதிமுக, திமுக என மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், திமுகவினர் முன்னிலை பெற்ற பல இடங்களில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகாரளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். மேலும் மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, நேற்றிரவு 11 மணியளவில், மாநில தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் சென்ற மு.க.ஸ்டாலின், திமுக வெற்றி பெற்ற பல இடங்களில் வேட்பாளர்களுக்கு சான்றிதழ் தர மறுப்பதாகவும், அதிமுக வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கப்படுவதாகவும் புகாரளித்தார். 
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், அதிமுகவின் ஜனநாயக படுகொலைக்கு மாநில தேர்தல் ஆணையம் துணை போவது வருத்தமளிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார்.

credit ns7.tv