புதன், 4 மார்ச், 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியது


சீனாவில் தொடங்கி 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3053 ஆக அதிகரித்துள்ளது. 
நேற்று ஒரு நாளில் மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் நேற்று ஒரு நாளில் 42 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரமாக குறைந்திருந்த உயிரிழப்புகள் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது உலக நாடுகளை பீதியடையச் செய்துள்ளது.  
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த 20க்கு மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூயார்க் நகரில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். 
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், இத்தாலியில் இருந்து மீட்டு வர வேண்டும் என இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 
தங்களை உடனடியாக மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாவியா நகரில் மட்டும் 85 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credt ns7.tv