புதன், 4 மார்ச், 2020

நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, நேற்று தொடங்கியது. டெல்லி வன்முறை தொடர்பாக, இரு அவைகளிலும் தொடர் அமளி ஏற்பட்டதை அடுத்து, இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதை அடுத்து, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. எனினும், டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், மற்ற அலுவல்கள் நடைபெறக் கூடாது என்றும், கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு, சபாநாயகர் ஓம் பிர்லா விடுத்த வேண்டுகோளை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. 
இதையடுத்து, அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து, சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதை அடுத்து பகல் 12 மணிக்கு, அவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய நிலையில், கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால், மக்களவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதேபோல், டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளியை அடுத்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, அவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தார்.  இதையடுத்து, மீண்டும் அவை கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
credit ns7.tv