செவ்வாய், 17 மார்ச், 2020

ராஜினாமா செய்த குஜராத் காங். எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்


மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து குஜராத்திலும் காங்கிரஸ் கட்சி கடும் இன்னலை சந்தித்து வருகிறது. குஜராத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கி வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது அரசியல் அரங்கில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புயலை கிளப்பியவர் அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள், ஒருவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா. மத்திய பிரதேசத்தின் முதல்வராகும் முயற்சி கைகூடாத நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் கிடைக்காத விரக்தியில் இருந்த சிந்தியாவுக்கு  ராஜ்யசபா எம்.பி தேர்தலிலும் வாய்ப்பு மறுக்கப்படவே அதிருப்தியின் உச்சத்திற்கு சென்று திடீரென அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
சிந்தியாவின் ஆதரவாளர்களாக விளங்கும் 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்களும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினர். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத்தவறினால் ஆட்சி பறிபோகும் சூழலுக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.  
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குஜராத்தில் புதிய களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.
182 இடங்கள் அடங்கிய குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 103 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 73 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இதனிடையே மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் குஜராத் அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அங்கு இருகட்சிகளின் பலத்தின் அடிப்படையில் மொத்தம் உள்ள 4 இடங்களில் பாஜகவால் 3 இடங்களில் எளிதாக வெற்றி பெற முடியும். ஒரு இடத்திற்கு கட்சி மாறி ஓட்டு போட்டால் மட்டும் அக்கட்சியால் வெற்றி பெற முடியும். அதே போல காங்கிரஸ் கட்சியால் தன் சொந்த பலத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற முடியும். மற்றொரு இடத்தில் வெற்றி பெற பிற கட்சிகள் அல்லது கட்சி மாறி வாக்களித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழல் உள்ளது.
இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 4 பேர் நேற்று தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்து, அவர்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டது. இன்று மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளதால் மொத்தம் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் ராஜினாமா செய்த 5 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக குஜராத் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் 73ஆக இருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 68 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடகாவில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்த நிலையில் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
credit ns7v/ ANI