வெள்ளி, 13 மார்ச், 2020

தமிழக அரசுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!


Image
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழக அரசு உடனே வழங்க தவறினால், வேறொரு பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் இருந்து 10 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு (IOE) சிறப்பு அந்தஸ்து வழங்கு திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன. இதில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு Institution of Eminence  என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்குவதாக, கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வீதம், 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தரப்பில், ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
69 சதவீத இடஒதுக்கீடு, பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க மாற்று ஏற்பாடு, உள்ளிட்ட குழப்பம் போன்ற காரணங்களால், தமிழக உயர்கல்வித்துறையால், உடனடியாக ஒப்புதல் கடிதத்தை அளிக்க இயலவில்லை. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்து 8 மாதங்கள் ஆகிவிட்டதால், உடனே சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை, மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒப்புதல் கடிதத்தை உடனே சமர்ப்பிக்காவிட்டால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட உள்ள சிறப்பு அந்தஸ்து, தரவரிசையில் அண்ணா பல்கலைகழகத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள, புனேவில் உள்ள சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
சட்டப்பேரவையில், உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்கும் முன்,  சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளிக்கும் வரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான, ஒப்புதல் கடிதத்தை மாநில அரசு வழங்காது என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, அண்ணா பல்கலை.யை பிரிப்பதோடு மத்திய அரசுக்கு தாரை வார்க்க உள்ளதாக தகவல் பரவுவதாகவும், அதற்கு விளக்கம் அளிக்குமாறும் கோரினார். அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்க்கு சீர்மிகு பல்கலை அந்தஸ்து பெறுவது தொடர்பாக 5 அமைச்சர்களை கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்திருப்பதாகவும் அந்த குழு சாதக பாதகங்களை கண்டறிந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கவோ, அதன் பெயரை மாற்றவோ அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்த்து கொடுக்கவோ தமிழக அரசின் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
credit ns7.tv