”அச்சமில்லை அச்சமில்லை” பாரதியின் பாடலோடு நடைபெற்ற மயிலாப்பூர் ஷாஹீன் பாக் போராட்டம்! ஜெயலலிதா இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காதுங்க... அந்த அம்மா ”நீட்” தேர்வையே வேணாம்னு சொன்னாங்க - போராட்டக்காரர் 13 03 2020
credit : IndianExpress.com
credit : IndianExpress.com
Anti CAA protest Mylapore Shaheen Bagh protests against CAA NPR NRC : வண்ணாரப்பேட்டையை தொடர்ந்து மயிலாப்பூரிலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடத் துவங்கியுள்ளனர். மார்ச் மாதம் 6ம் தேதி துவங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மயிலாப்பூர் ஜும்மா மசூதிக்கு பின்னாள் இருக்கின்ற இடத்தில் மேலே கூரை அமைக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தங்களுக்கான இடத்தில் அமர்ந்து மிகவும் அமைதியாக தங்களின் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
”ஆசாதி, ஆசாதி என்று கேட்டுக் கொண்டிருந்த போதும், அதையும் தாண்டி உரக்க ஒலிக்க துவங்கியது அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்ற பாரதியின் பாட்டு. இந்த போராட்டஙகள் குறித்து 61 வயதான ஆயுப் கானிடம் கேள்விகள் கேட்டோம். தன்னுடைய நண்பர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த அவர் “தன்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகே இருக்கும் பேரையூர் என்று அறிமுகம் செய்து கொண்டார். சென்னைக்கு வந்து செட்டில் ஆகி 40 வருடங்கள் ஆகின்றது” என்று அறிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவரிடம் கேட்ட போது “இதுக்கு முன்னாடியும் தான் இந்த சட்டம் இருந்துச்சு. ஆனா இந்தியாவுக்கு வந்து ஒருத்தங்க 5 வருசம் தங்கிட்டா அவங்களுக்கு குடியுரிமை சட்டம் வழங்கலாம்னு இருக்குற சட்டத்த இவங்க ஏன் மாத்தனும்? நாங்களும் இந்த ஊர் தான். எங்க பொறப்பு, பூர்வீகம் எல்லாமே இந்த ஊரு தான். எங்ககிட்ட இருக்கிற குடியுரிமைய பறிச்சுக்கிட்டு போய்ட்டா அப்பறம் நாங்க என்ன பண்ணுறது?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
என்.பி.ஆர் குறித்தும் என்.ஆர்.சி குறித்தும் கேள்வி எழுப்பிய போது ”எல்லாம் ஒன்னோடு ஒன்னு இணைஞ்சு தான் இருக்கு. அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசில குடியுரிமைய பறிக்கனும்னு தான் நெனைக்குறாங்க” என்றார்.
மற்ற மாநிலங்களில் என்.பி.ஆரின் சில கேள்விகள் கேட்கப்படமாட்டாது என்றும், காங்கிரஸ் ஆட்சியின் போது கேட்கப்பட்ட கேள்விகளே கேட்கப்படும் என்றும், என்.பி.ஆர் கொண்டு வரப்படாது என்றும் கூறப்பட்டுள்ள போது, தமிழக முதல்வர் மத்திய அரசின் என்.பி.ஆர் அப்படியே பின்பற்றப்படும் என்று சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை உறுதி செய்து கொண்டார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது ”ஜெயலலிதா இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காதுங்க… அந்த அம்மா ”நீட்” தேர்வையே வேணாம்னு சொன்னாங்க. ஆனா தங்களோட ஆட்சியை தக்க வைச்சுக்க தான் பாஜக சொல்றதுக்கு எல்லாம்” அதிமுக சரின்னு சொல்லுது என்றும் குறிப்பிட்டார்.
”ஷாஹீன்பாக்” இந்த வருடத்திற்கான வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த ஊரின் பெயராக நிச்சயம் நிலைத்து இருக்கும். இஸ்லாமியர்களின் தங்களின் உரிமைகளுக்காக, தங்களுக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடிக்க, தங்களின் குரல்களை எழுப்பும் இடங்களுக்கு எல்லாம் ஷாஹீன்பாக் என்று தான் பெயரிட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆருக்கு எதிராக டெல்லியின் ஷாஹீன்பாக் முதலில் போராட்ட களமாக மாறியது. பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் தங்களின் குரல்களை சி.ஏ.ஏவுக்கு எதிராக எழுப்பினார்கள். அதன் பின்பு இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களால் முன்னெடுக்கபட்டு, இந்துக்களும் ஓரிரு இடங்களின் தங்களின் ஆதரவுகளையும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் என்று எடுத்துக் கொண்டால் வண்ணாரப்பேட்டையை தான் குறிப்பிட வேண்டும். வண்ணாரப்பேட்டை ஷாஹீன்பாக் என்று பெயர் பெற்ற இடம், காவல்துறையின் அத்துமீறல்களால் சில நாட்கள் கலவர பூமியாகவும் காட்சி அளித்தது. ஆனாலும் அங்கு போராட்டக் குரல்கள் ஓய்ந்ததாக இல்லை.