செவ்வாய், 3 மார்ச், 2020

டெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் வன்முறை... பூர்வீகமற்றவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

Meghalaya Shillong under curfew mob attacked 9 non-indigenous :  டெல்லி கலவரத்திற்கு பின்னால் நாடு மீண்டும் அமைதி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் போது மேகலாயாவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் பார்பெத்தாவைச் சேர்ந்த ரூப்சந்த் தேவன் என்ற 29 வயது இளைஞர் சனிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டுள்ளார். சில்லாங்கின் பாரா பஜாரில் தக்காளி விற்றுக் கொண்டிருக்கும் ரூப்சந்த் தேவனை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். லாபான் பகுதியின் தன்னுடைய மனைவி மற்றும் 15 நாட்களுக்கு முன்பு தத்தெடுத்த பெண் குழந்தையுடன் அவர் வாழ்ந்து வந்தார். சி.ஏ.ஏவு தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் மரணமடைந்த மூவர்களில் இவரும் ஒருவர். சனிக்கிழமை காலை தன்னுடைய கடைக்கு சென்ற இவரை, இரண்டு மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

கிழக்கு காசி மலையில் அமைந்திருக்கும் இச்சாமதி கிராமத்தில், பூர்வீக குடிகள் அற்ற நபர்களால், லுர்ஷாய் ஹைன்னியெவ்தா (Lurshai Hynniewta) என்பவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தேவன் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வன்முறைகளால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மொபைல் இன்டெர்நெட் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரூப்சந்த் குற்றமற்றவர். காசியின் இச்சாமதியில் ஏற்பட்ட கொலைக்கு ரூப்சந்தினை கொலை செய்வது எப்படி நீதியாக இருக்கும் என்று தேவனின் உறவினர் சம்சூல் கேள்வி எழுப்புகிறார். தேவன் தன்னுடைய மனைவி, சின்னஞ்சிறிய கைக்குழந்தை, பக்கவாதம் வந்த அப்பா, உடல்நிலை சரியில்லாத அம்மா, மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.
தேவனின் வீட்டு உரிமையாளர் பர்வீன் நோங்க்ரும் கூறுகையில் “தேவன் கடந்த 5 ஆண்டுகளாக இங்கேயே தங்கி சில்லாங்கில் பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் அன்று அவர் வேலைக்கு சென்றார். பிறகு அவர் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தான் எங்களை வந்து சேர்ந்தது” என்று தெரிவித்தார்.
ரூப்சந்த் தேவன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர். அவருடன் சேர்ந்து இந்த கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் மேகாலயாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல. முகமூடி அணிந்த பலர் பாரா பஜார் முழுவதும் சென்று “குறிப்பிட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக” தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் பலரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இச்சாமதியில் நடைபெற்று வந்த சி.ஏ.ஏவுக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்ற ஹைன்னியெவ்தா கொலை செய்யப்பட்டதிற்கு பழி வாங்கவே இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளது என்று காவல்த்துறை தரப்பு அறிவித்துள்ளது.
ஷில்லாங்கில் இருந்து 90 கி.மீ அப்பால் அமைந்துள்ளது இச்சாமதி கிராமம். வெள்ளிக்கிழமை மதியம் காசி மாணவர்கள் சங்கத்தின் Khasi Students’ Union (KSU) சார்பில் அங்கு சி.ஏ.ஏவுக்கு எதிராகவும், இன்னர் லைன் பெர்மிட்டினை முறைப்படுத்த வேண்டும் என்றும் கூறி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. மூன்று மணிக்கு அந்த கூட்டம் முடிவுற்ற நிலையில், கே.எஸ்.யூ உறுப்பினர்களுக்கும், மேகாலயாவின் பூர்வீகமற்றவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. அங்கிருந்த சந்தையில் வைக்கப்பட்டிருந்த வைக்கப்போருக்கு தீ மூட்டியதுடன், கே.எஸ்.யூ உறுப்பினர்கள் வீடு ஒன்றையும் கொளுத்த முயற்சி செய்தனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பூர்வீக குடியினர் அல்லாதோர், கே.எஸ்.யூ உறுப்பினர்கள் வந்த பேருந்தின் மீது கல்லெறிந்ந்து தாக்குதல் நடத்தினர்.
ஆனால் கே.எஸ்.யூ தரப்பினர் கூறும் போது, இந்த தாக்குதல்கள் யாவும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், நாங்கள் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடுவது காரணமாகவே தாக்கப்படுகின்றோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு மாநிலஙகளில் தொடர்ந்து சில குழுவினர் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களை எதிர்த்து வருகின்றனர். மேலும் ஐ.எல்.பி. சட்டத்தை நடைமுறைக்கு கொண்ட வரவேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. நாகலாந்து, அருணாச்சல் பிரதேசம், மிசோரம், மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அம்மாநிலத்தை சாராதோர் வாழ்வதற்கு தேவையான விதிமுறைகளை வலியுறுத்தும் சட்டம் இதுவாகும்.